Abdul Karim Tunda: 1993 தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி விடுதலை.! அஜ்மீர் தடா நீதிமன்றம் தீர்ப்பு.!
Abdul Karim Tunda: நாட்டையே உலுக்கிய 1993 ஆம் வருட தொடர் குண்டு வெடிப்பு(Serial Bomb Blast) வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் துண்டா அஜ்மீர் தடா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.
1992 ஆம் வருடம் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து 1993 ஆம் வருடம் பாபர் மசூதி நினைவு நாளில் மும்பை லக்னோ நாக்பூர் ஹைதராபாத் மற்றும் சூரத் ஆகிய நகரங்களிலும் சில ரயில்களிலும் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டது. இந்த வழக்கில் பயங்கரவாதிகள் அப்துல் கரீம் என்ற துண்டா இர்பான் மற்றும் ஹமிமுதீன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இதில் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் என்கிற துண்டா 2013 ஆம் வருடம் நேபாளத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது தடா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கு அஜ்மீர் தடா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் 175 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிப்ரவரி 29ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இன்று இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கிய நீதிமன்ற நீதிபதி மகாவீர் குமார் குப்தா தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் துண்டாவை விடுதலை செய்வதாக அறிவித்தார். இந்தத் தீர்ப்பிற்கு எதிராக அரசு தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறது. தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி அஜ்மீர் தடா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் துண்டா பகுதியைச் சேர்ந்த அப்துல் கரீம் கட்சி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். 1980 ஆம் வருடம் இவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பு மூலம் பயங்கரவாத பயிற்சிகள் பெற்றார். இதனைத் தொடர்ந்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த இவர் நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது 33 கிரிமினல் வழக்குகள் உள்ளது. இந்தியாவில் நடைபெற்ற 40க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகள் நிகழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்நிலையில் அஜ்மீர் நீதிமன்றம் இவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது