தூள்...! விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் 2024-25-ஆம் ஆண்டில் 18,00,000 பேர் உள்ளனர்...! மத்திய அரசு தகவல்...!
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 17.09.2023 அன்று தொடங்கப்பட்டது. தங்கள் கைகள், கருவிகளால் வேலை செய்யும் கைவினைஞர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை மூலம் அங்கீகாரம், திறன் மேம்பாடு, கருவிகள் வாங்குவதற்கான ஊக்கத்தொகை, கடன் ஆதரவு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை, சந்தைப்படுத்தல் ஆதரவு ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 30.01.2024 வரை பிரதமரின் விஸ்வகர்மா இணையதளத்தில் பதிவுகளின் எண்ணிக்கையில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் படி, பிரதமரின் விஸ்கர்மா திட்டத்திற்காக 2023 -24-ம் ஆண்டில் 1,860 கோடி ரூபாயும், 2024 -25-ம் ஆண்டில் 4,824 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட பயனாளிகள் எண்ணிக்கையின்படி 2023-24-ம் ஆண்டில் 6,00,000 பேரும், 2024-25-ம் ஆண்டில் 18,00,000 பேரும் உள்ளனர். பாரம்பரிய கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதையும், அவர்களின் தயாரிப்புகளை உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு கொண்டு செல்வதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 18 வகையான கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் பயனடைவார்கள்.
பயனாளிகளுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, பயிற்சியின் போது, தினமும், 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மேலும், கருவிகள் வாங்க 15,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். பயனாளிகள் ரூ.3 லட்சம் வரை பிணையில்லாக் கடன் பெற தகுதியுடையவர்கள்.