போலீஸ் யூனிபார்ம்.. டம்மி துப்பாக்கி..!! ஏமாறியதே தெரியாமல் தன்னை IPS அதிகாரியாக உணர்ந்த இளைஞர்..!!
பீகார் மாநிலத்தில் லக்கிசராய் பகுதியை சேர்ந்தவர் மிதிலேஷ் மஞ்சி. 18 வயது இளைஞரான இவர், காவலர் சீறுடை அணிந்து கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். தனது தாயாரிடம் தான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி என்று கூறியுள்ளார். இதனால் மக்கள் கூட்டம் அங்கு கூடியது. கூட்டம் அதிகரிக்கவே இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார், மிதிலேஷை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்களிடம் தான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி என்றும், தனக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் மிதிலேஷ் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. 10-ம் வகுப்பு மட்டுமே முடித்திருக்கும் மிதிலேஷை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனோஜ் சிங் என்பவர் சந்தித்துள்ளார். அவர், ரூ.2.3 லட்சம் பணம் இருந்தால், ஐ.பி.எஸ் அதிகாரி ஆகிவிடலாம் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பிய மிதிலேஷ் தனது ரூ.2 லட்சத்தை கடனாக பெற்று மனோஜ் சிங்கிடம் கொடுத்துள்ளார். அதன்பிறகு அடுத்த நாள் மிதிலேஷிடம் காவலர் சீறுடையும், பேட்ஜையும், துப்பாக்கியும் கொடுத்துள்ளார். மேலும் அவர் தற்போது பயிற்சியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய மிதிலேஷ், உண்மையில் நான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி என நினைத்து, போலீஸ் உடையில் சுற்றியுள்ளார். மேலும் அவர் வைத்திருந்த துப்பாக்கி போலி என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க ; வைத்திலிங்கம் மீது வழக்கு போடப்பட்டது ஏன்…? திமுக மீது OPS பரபரப்பு குற்றச்சாட்டு…!