17 வயது சிறுவனின் உயிரை காவு வாங்கிய ஆன்லைன் கேம்.! லக்னோவில் நடந்த துயர சம்பவம்.!
உத்திரபிரதேச மாநிலம் லக்னோ நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் மொபைல் கேமில் பணத்தை இழந்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்திரபிரதேச மாநில தலைநகரான லக்னோவின் புறநகர் பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறான்.
சிறுவன் படிப்பதற்காக அவனது பெற்றோர் மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளனர். அதில் ஆன்லைன் கேம் விளையாடி 10,000 ரூபாய் இழந்ததாக தெரிகிறது. இந்தக் கடனை அடைப்பதற்காக உறவினர்களிடமும் கடன் வாங்கி இருக்கிறான் சிறுவன். இந்தக் கடனை திருப்பி செலுத்த முடியாததால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறான்.
70% தீக்காயங்களுடன் சிறுவனை மீட்ட பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதனைத் தொடர்ந்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த கிராமத்தில் அடக்கம் செய்வதற்காக சிறுவனின் உடலை எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.