சென்னையில் 17 பேர் பலி!… மிக்ஜாம் புயலின் கோரதாண்டவம்!… மாநகர காவல்துறை தகவல்!
சென்னையை புரட்டி எடுத்த பேய் மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக மாநகர காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் 'மிக்ஜாம்' புயல் காரணமாக, சிந்தாதிரிப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் சிக்கி தவிப்போரை பேரிடர் மீட்பு படையினரும், காவல் துறையினரும் ரப்பர் படகு வாயிலாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர். அதேபோல, 69 இடங்களில் சாலையில் சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். மின்சாரம் பாய்ந்தும், மரம் விழுந்து மழை பாதிப்பால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அஸ்பிரின் கார்டன் அருகே தேங்கிய மழைநீரில் ஐ.சி.எப்., தலைமைக் காவலர் ருங்மாங்கதன்(48), உயிரிழந்து கிடந்தார்.
துரைப்பாக்கம் பாண்டியன் நகர் பகுதியில் மின்சாரம் பாய்ந்து கணேசன்(70) என்பவர் உயிரிழந்தார். வீட்டில் தேங்கிய மழை நீரில் மூழ்கி மயிலாப்பூரில் பெருமாள்(64) என்பவரும், மடிப்பாக்கம் பகுதியில் சாமிக்கண்ணு (85)என்பவரும், பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் தாமோதரன்(40) என்பவரும், சூளைமேடு பகுதியில் செல்வம்(50) என்பவரும் உயிரிழந்தனர். மரம் விழுந்து பிராட்வே பகுதியில் ஆனந்தபாபு (35) என்பவரும், பெசன்ட் நகர் பகுதியில் முருகன் 35) என்பவரும் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்களின் விபரங்கள் குறித்து எந்த தகவலும் கண்டறியப்படவில்லை. அடையாள தெரியாத நபர்களின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.