For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

17 நாட்கள் வாழ்வா சாவா போராட்டம்!… 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!… உறவினர்கள் நெகிழ்ச்சி!

05:34 AM Nov 29, 2023 IST | 1newsnationuser3
17 நாட்கள் வாழ்வா சாவா போராட்டம் … 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு … உறவினர்கள் நெகிழ்ச்சி
Advertisement

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 17 நாள் கடின போராட்டத்திற்குப் பிறகு நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மீட்புப்பணியாளர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

Advertisement

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி, சில்க்யாரா பகுதியில் சார்தாம் யாத்திரை நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் 4.5 கிமீ சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்தது. கடந்த 12ம் தேதி, இப்பணியின் போது சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் சுரங்கத்திற்குள் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். சுமார் 60 மீட்டர் தூரத்திற்கு சுரங்கத்திற்குள் கட்டுமான இடிபாடுகள் விழுந்தன. இவற்றை அகற்றி தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஓஎன்ஜிசி, பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை நிபுணர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டனர்.

முதற்கட்டமாக, 6 அங்குல குழாயை இடிபாடுகள் வழியாக உள்ளே செலுத்தி தொழிலாளர்களுக்கு உணவு, மருந்து வழங்கப்பட்டது. இதன் மூலம் தொழிலாளர்கள் சுரங்கத்தில் நலமுடன் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆகர் கனரக இயந்திரம் கொண்டு, சுரங்க இடிபாடுகளில் கிடைமட்டமாக 57 மீட்டர் தூரத்திற்கு துளையிட்டு, 800 மிமீ அகல இரும்பு குழாய் செலுத்தி அதன் வழியாக தொழிலாளர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் 46.8 மீட்டர் தூரம் வரை துளையிட்ட நிலையில், ஆகர் இயந்திரத்தின் பிளேடு உடைந்து இடிபாடுகளில் சிக்கிக் கொண்டது. இதனால் இயந்திரம் மூலம் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு, உடைந்த பிளேடு வெளியில் எடுக்கப்பட்டது.

மீதமுள்ள பகுதியை ‘எலி வளை’ சுரங்க நுட்பத்துடன் கைக்கருவிகளால் துளையிட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி, 12 எலி வளை தொழில்நுட்ப நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நேற்று முன்தினம் இப்பணி தொடங்கியது. அதே சமயம், மாற்று ஏற்பாடாக சுரங்கத்தின் மேல் பகுதியில் 80 மீட்டர் தூரத்திற்கு செங்குத்தாக துளையிடும் பணியும் நடந்து வந்தது.

இந்நிலையில், மீட்புப்பணியின் 17வது நாளாக நேற்று, எலி வளை துளையிடும் பணியில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. 24 மணி நேரத்திற்குள் இடிபாடுகளில் 12 மீட்டர் தூரத்திற்கு துளையிடப்பட்டது. மொத்தம் 58 மீட்டர் துளையிடப்பட்ட நிலையில், பிற்பகல் 1.30 மணி அளவில் துளையிடும் பணி முடிந்ததாகவும் விரைவில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் பரவின. இதனால் செங்குத்தாக துளையிடும் பணி நிறுத்தப்பட்டது.

ஆனால், மாலை 4 மணி அளவில் பேட்டி அளித்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) சையத் அதா, மேலும் 2 மீட்டர் தூரத்திற்கு துளையிட வேண்டியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்தப் பணிகள் இரவு 7.45 மணி அளவில் முடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் 800 மிமீ அகல இரும்பு குழாய் வழியாக உள்ளே சென்று தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு தொழிலாளர்களாக அவர்கள் உள்ளேயிருந்து மீட்டு அழைத்து வந்தனர்.

முதல் தொழிலாளியை இரவு 8 மணி அளவில் வெளியில் அழைத்து வந்தனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களை முதல்வர் புஷ்கர் சிங் தாமியும், ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங்கும் மாலை அணிவித்து வரவேற்று நலம் விசாரித்தனர். பின்னர் தொழிலாளர்களுக்கு அங்கேயே உள்ள மருத்துவ முகாமில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொருவராக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சின்யாலிசார் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் உள்ள சிறப்பு வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் 45 நிமிடத்தில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன் மூலம் 17 நாட்களாக தொழிலாளர்களுக்காக வெளியில் காத்திருந்த அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் இனிப்புகளை பரிமாறி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். மீட்புப்பணியாளர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். இது மீட்புப்பணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. மீட்கப்பட்ட தொழிலாளர்களும் நல்ல உடல் நலத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டது குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கு தலா ₹1 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.

Tags :
Advertisement