4 ஆண்டுகளில் 16 லட்சம் டன் தாது மணல் கடத்தல்..!! பகீர் கிளப்பிய தமிழ்நாடு அரசு..!! உறைந்துபோன உயர்நீதிமன்றம்..!!
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டுக்கு இடையிலான கால கட்டத்தில் சுமார் 16 லட்சம் டன் தாது மணல் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் சட்டவிரோதமாக தாது மணல் அள்ளப்படுவது தொடர்பாக கடந்த 2015இல் சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது.
கடந்த 2017இல் தமிழ்நாட்டில் தாது மணல் அள்ளுவதற்கும், சேமித்து வைப்பதற்காக தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் இருந்து சுமார் 1.5 கோடி டன் தாது மணல் பறிமுதல் செய்யப்பட்டு அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பின்னர், கடந்த 2021இல் பாதுகாக்கப்பட்டு இருந்த தாது மணல் சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து தனியார் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
விசாரணையில், தாது மணல் சேகரிக்கப்பட்டிருந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சேதப்படுத்தப்பட்டு சட்ட விரோதமாக தாது மணல் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மீண்டும் ஆய்வு செய்ததில், 2018 - 2022 ஆண்டு வரை இடையேயான ஆண்டுகளில் மட்டும் சுமார் 16 லட்சம் டன் அளவிலான தாது மணல் சட்ட விரோதமாக கடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும் சுமார் 6,449 டன் அளவிலான மோனோசைட் என்ற கனிமங்களும் கடத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது 24 மணி நேரம் காவல்துறை கண்காணிப்பில் தாது மணல் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வி.வி மினரல்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.