ESI திட்டத்தில் நவம்பர் மாதத்தில் 15.92 லட்சம் புதிய ஊழியர்கள்...! மத்திய அமைச்சகம்
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 15.92 லட்சம் புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதைத் தொழிலாளர் அரசு கழகத்தின் இ.எஸ்.ஐ.சி தற்காலிக சம்பளப் பட்டியல் தரவு தெரிவிக்கிறது. 2023 நவம்பர் மாதத்தில் சுமார் 20,830 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு, தொழிலாளர் அரசு ஈட்டுறுதித் திட்டத்தின் சமூகப் பாதுகாப்புக் குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த மாதத்தில் மொத்தம் சேர்க்கப்பட்ட 15.92 லட்சம் ஊழியர்களில், 7.47 லட்சம் ஊழியர்கள் அதாவது மொத்தப் பதிவுகளில் 47% பேர், 25 வயதிற்குட்பட்டவர்கள் என்பதால் நாட்டின் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதைத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. ஊதியத் தரவுகளின் பாலின வாரியான பகுப்பாய்வு, 2023 நவம்பரில் பெண் உறுப்பினர்களின் நிகர சேர்க்கை 3.17 லட்சமாக இருப்பதைக் காட்டுகிறது.
2023 நவம்பர் மாதத்தில் மொத்தம் 58 திருநங்கைகள் இ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளதாக தரவு கூறுகிறது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதன் நன்மைகளை வழங்க இ.எஸ்.ஐ.சி உறுதிபூண்டுள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.