கடித்து குதறிய தெரு நாய்கள்.. துடிதுடித்து உயிரிழந்த 14 மாத குழந்தை…
ஆந்திர மாநிலத்தின் என்டிஆர் மாவட்டத்திலுள்ள பெனுகஞ்சிப்ரோலு பகுதியில் உள்ளது மாடல் காலனி. இங்கு, கோபால் ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சம்பவத்தன்று, வழக்கம் போல் குழந்தை தெருவில் விளையாடி உள்ளது. அப்போது, அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் சேர்ந்து குழந்தையை கடித்து குதறி உள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், தெருநாய்களை விரட்டி விட்டு, குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், வெறி நாய்கள் கடித்ததில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, பெனுகஞ்சிப்ரோலு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இறந்த குழந்தைக்கு நீதி வேண்டியும், தெருநாய்களை கட்டுப்படுத்த கோரியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இறந்த குழந்தையின் தந்தை கோபால் ராவ், கிராமத்தில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி வருவதாகவும், இதனால் பல பெற்றோர்கள் அச்சமடைந்து தங்கள் குழந்தைகளை வெளியே விட பயப்படுவதாகவும் கூறியுள்ளார்.
Read more: கல்லூரி பேராசிரியர் செய்த கேவலமான செயல்; பாத்ரூமில் மாணவி செய்த காரியத்தால் ஏற்பட்ட திருப்பம்..