பருவமழை நடவடிக்கையில் ஈடுபட 13,000 தன்னார்வலர்கள்...! துணை முதல்வர் உதயநிதி அதிரடி
தமிழ்நாட்டில் அடுத்துள்ள வரும் சில நாட்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட 13,000 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர்; வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்து வரும் சில நாட்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட 13,000 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
தாழ்வான மின்மாற்றிகள் அதிக உயரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பருவமழைக்காலத்தில் எச்சரிக்கைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ‘தமிழ்நாடு அலர்ட்’ என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகாருக்கு பதிலளித்து, அதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.