1250 ஆண்டுகளில் முதல் முறையாக.. "ஜப்பான் நிர்வாண மனிதன் திருவிழாவில் பெண்களுக்கு அனுமதி.." நிபந்தனைகள் என்ன.?
ஜப்பான் நாட்டில் 1250 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிர்வாண மனிதன் திருவிழாவில் முதல் முதலாக பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிகழ்வு பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள கொனோமியா ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் ஹடகா என்றழைக்கப்படும் நிர்வாண மனிதன் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் ஆண்கள் இடுப்பில் துணியை மட்டும் கட்டிக் கொண்டு கலந்து கொள்வார்கள்.
1250 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்த திருவிழா இந்த வருடம் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த புனித தளத்தில் நடைபெற இருக்கும் நிர்வாண மனிதன் திருவிழாவில் முதல் முதலாக பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது ஜப்பான் நாட்டின் பாலின சமத்துவத்தை நிலை நிறுத்தும் முறை நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பாலின சமத்துவ செயல்பாட்டாளர்கள் இந்த முடிவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
எனினும் சம்பிரதாய சடங்குகளில் பெண்களை ஈடுபடுத்துவது தொடர்பான சர்ச்சைகளும் எழுந்திருக்கிறது.இந்த திருவிழாவிற்கு பெண்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது பாலின சமத்துவத்தை காட்டுவதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நிர்வாண மனிதன் திருவிழா மற்றும் சடங்குகளில் பெண்கள் முழுமையாக அனுமதிக்கப்படுவது தான் பாலின சமத்துவத்தை நிலை நிறுத்துவதாக அமையும் என அவர்கள் வாதிடுகின்றனர். சடங்கு மற்றும் சம்பிரதாயங்களை மேற்கோள் காட்டி பெண்களை இது போன்ற திருவிழாக்களில் இருந்து ஒதுக்குவது பாலின சமத்துவமின்மையை குறிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக பல இடையூறுகளை சந்தித்து வந்த திருவிழா தற்போது புதிய மாற்றங்களுடன் நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவில் 40 பெண்கள் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நிர்வாண மனிதன் திருவிழாவில் கலந்து கொள்ளும் பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிர்வாண ஆண்களுடன் நடைபெறும் வன்முறை சடங்குகளை பெண்கள் பின்பற்ற அனுமதி இல்லை. மூங்கில் புல்லை துணியில் போர்த்தி ஆலயத்திற்குள் எடுத்துச் செல்லும் 'நஒயிசா' சடங்கில் கலந்து கொள்வதற்கு மட்டுமே பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விழா தெரிவித்துள்ளனர்.
இந்த விழாவில் பெண்களும் பங்கேற்க வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் அமைப்பின் துணைத் தலைவர் சுஸுகி " நேட்டோ தீபகற்ப பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட எனது குடும்பம் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்காக இந்த திருவிழாவில் தான் பங்கேற்பதை விரும்புவதாக" தெரிவித்திருக்கிறார். இந்த திருவிழாவின் போது வர இருக்கின்ற ஆண்டில் பிளேக் போன்ற கொடிய தொற்று நோய்கள் இடமிருந்து பாதுகாப்பு வேண்டியும் புத்தாண்டில் அதிர்ஷ்டம் நிகழ வேண்டியும் சடங்குகளை தொடங்குவார்கள். இதன் ஒரு பகுதியாக உள்ளூர் ஆண்கள் ஆலயத்திற்கு முன் கூடுவார்கள்.
இந்த திருவிழாவின்போது ஆண்கள் 'ஃபண்டோஷி' என்ற இடுப்புத் துணிகளையும் பல வண்ணங்களால் ஆனா துணிகளை தலையில் அணிந்து கொள்வார்கள். ஆலயத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய மூங்கில் தூண்களில் ரிப்பன்களை கட்டி எடுத்துச் செல்வார்கள். வாலிகளில் ஐஸ் தண்ணீர் வைத்துக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் தெளித்து வருவார்கள். மேலும் மதியத்தின் பிற்பகுதியில் ஆலயத்தை அடைந்ததும் இஷ்ட தெய்வமான ஷின்-ஓட்டோகோ தோன்றுவதற்காக பிரார்த்தனை செய்வார்கள்.
உள்ளூர் முதியவர்களின் கருத்துப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதன் ஆலயத்தில் தனித்து வைக்கப்படுகிறான். அவன் தனது முழு நேரத்தையும் பிரார்த்தனைகளில் செலவிடுகிறான். திருவிழா தினத்தன்று உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள முடிகள் நீக்கப்பட்டு நிர்வாண நிலையில் சன்னதியை சுற்றி இருக்கும் மக்கள் முன்னிலையில் அனுப்பப்படுகிறான். சுற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது துரதிஷ்டத்தை மாற்றுவதற்காக நிர்வாண நிலையில் இருக்கும் மனிதனை தொடர் முயற்சிப்பார்கள். இதன் மூலம் தங்களது துரதிஷ்டம் மாற்றப்பட்டு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை நம்பிக்கையாக இருக்கிறது. நிர்வாண நிலையில் இருக்கும் மனிதன் மீது ஷின்-ஓடோகோ என்னும் இஷ்ட தேவதையின் அருள் இறங்கி இருப்பதாக நம்புகிறார்கள். நீண்ட தேர வேண்டுதல்கள் மற்றும் தள்ளுதலுக்குப் பிறகு நிர்வாண மனிதர் மீண்டும் ஆலயம் அழைத்துச் செல்லப்படுகிறார். இதுதான் அந்த திருவிழாவின் சடங்காக இருக்கிறது.