ஹத்ராஸ் 122 பேர் உயிரிழப்பு... உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு...!
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல்.
உத்தர பிரதேசத்தில், ஹத்ராஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நேற்று நடந்தது. போலே பாபா பேசி முடித்ததும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு வெளியேறினர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உட்பட, 122 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹத்ரஸ் நகரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணைத் தொகையை அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.