Alert...! மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பயங்கர காற்று... தீவிர புயலாக மாறியது டானா...!
நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுபெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுபெறக்கூடும். இது, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாக நிலவக்கூடும். வடக்கு ஒடிசா–மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி-சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக நாளை இரவு கரையை கடக்கக்கூடும். அப்போது, அந்த பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் 23, 24, 25-ம் தேதிகளில் அதிகபட்சமாக 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.