ராம நவமி: அயோத்தி ராமர் கோயிலில் 1,11,111 கிலோ லட்டு பிரசாதம்!
ராம நவமியை முன்னிட்டு அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மிர்சாபூரில் இருந்து 1,11,111 கிலோ லட்டுகள் அனுப்பப்படுகின்றன.
நாடு முழுவதும், ராம நவமி விழா ஏப்ரல் 17ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டைக்கு பின் முதன்முறையாக ராம நவமி கொண்டாடப்பட உள்ள நிலையில், அயோத்தியில் விமரிசையாக ராமநவமியை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ராம நவமியை முன்னிட்டு மக்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக மிர்சாபூரில் இருந்து 1,11,111 கிலோ லட்டுகள் அனுப்பப்படுகின்றன. தேவ்ராஹா ஹான்ஸ் பாபா டிரஸ்ட் மூலம் பிரசாதம் அனுப்பப்படுகிறது. முன்னதாக, அயோத்தியில் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஜனவரி 22 ஆம் தேதி தேவ்ரஹா ஹன்ஸ் பாபா ஆசிரமம் 1,111 லட்டுகளை பிரசாதமாக அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அறங்காவலர் அதுல் குமார் சக்சேனா கூறுகையில், "அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்குப் பிறகு முதன்முறையாகக் கொண்டாடப்படும் ராம நவமி இது. இதனைக் கருத்தில் கொண்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேவ்ராஹா ஹன்ஸ் பாபா ஆசிரமம் ஒவ்வொரு வாரமும் பல்வேறு கோயில்களுக்கு பிரசாதம் அனுப்புகிறார். காசி விஸ்வநாதர் கோயில், திருப்பதி பாலாஜி கோயில் எனப் பல்வேறு கோயில்களுக்கு குறைந்தபட்சம் ஐயாயிரம் பிரசாத பாக்கெட்டுகள் அனுப்பப்படுகின்றன. அந்த வகையில் ராம நவமியை முன்னிட்டு மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக மிர்சாபூரில் இருந்து 1,11,111 கிலோ லட்டுகள் அனுப்பப்படுகின்றன.
ராம நவமி அன்று சயன ஆரத்திக்குப் பிறகு கோயில் வெளியேறும் இடத்தில் பிரசாதம் கிடைக்கும். எனவே பார்வையாளர்கள் தங்கள் மொபைல் போன்கள், காலணிகள், செருப்புகள், பெரிய பைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் போன்றவற்றை கோயிலில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.