இன்று 10ஆம் வகுப்பு ரிசல்ட்… தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்வது எப்படி?
10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகிறது. மாணவர்கள் சிரமமின்றி எளிதாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இந்த நிலையில் வீட்டில் இணைய வசதி இல்லாத மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பொதுத்தேர்வானது மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. இந்த தேர்வை 12,616 பள்ளியை சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள் மற்றும் 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதினர். மேலும், 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகளும் பொதுத்தேர்வை எழுதினர்.
இதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 12 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றன. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 88 முகாம்கள் அமைக்கப்பட்டன. விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இருக்கும் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in அல்லது http://dge.tn.gov.in என்னும் இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
இணைய வசதி இல்லாத மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே பதிவு செய்துள்ள மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசியத் தகவலியல் மையங்களில் (National Informatics Centres) 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறியலாம். அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.