சிக்கிய CCTV ஆதாரம்...! தேர்தல் விதி மீறலில் ஈடுபட்ட 106 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்...!
தெலங்கானாவில் தேர்தல் விதி மீறலில் ஈடுபட்ட 106 அரசு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஊரக வறுமை ஒழிப்புச் சங்கம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் விதிகளை மீறியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேடக் மக்களவைத் தொகுதிக்கான பாரத் ராஷ்டிர சமிதி வேட்பாளரும் முன்னாள் அரசு அதிகாரியுமான பி.வெங்கடராமி ரெட்டி கூட்டிய கூட்டத்தில் ஊழியர்கள் பங்கேற்றனர். வெங்கடராமி ரெட்டி கடந்த காலத்தில் சித்திப்பேட்டை மாவட்டத்தின் மாவட்ட கலெக்டராக இருந்தார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அவர் கட்சியில் இணைந்தார்.
மேடக் மக்களவையில் இருந்து பிஆர்எஸ் வேட்பாளர் சித்திபேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி பணி தொடர்பாக 106 பணியாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தை கூட்டினார். மேடக் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ரகுநந்தன் ராவ் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற மாவட்ட தேர்தல் அதிகாரியும், சித்திப்பேட்டை மாவட்ட ஆட்சியருமான சவுத்ரி, கூட்டத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின், 40 DRDA ஊழியர்கள் மற்றும் 66 MGNREGS பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.