10,000 குடும்பங்களை அகதிகளாக்கும் சிப்காட் திட்டம்...! மண்ணை காக்க போராட்டம் வெடிக்கும்...! அன்புமணி எச்சரிக்கை
ஆவடி அருகே சிப்காட் நில வங்கிக்காக வீடுகளை பறிப்பதா..? 10,000 குடும்பங்களை அகதிகளாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான நில வங்கிக்காக ஆவடி அருகில் 626 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த சிப்காட் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அப்பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் உள்பட 10,000 குடும்பங்கள் தங்களின் வாழ்விடங்களை இழந்து உள்நாட்டு அகதிகளாக மாறும் ஆபத்து உள்ளது. இதை உணராமல் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் அப்பாவி மக்களின் வசிப்பிடத்தையும், அடையாளத்தையும் பறிக்க அரசே முயல்வது கண்டிக்கத்தக்கதாகும்.
2021&ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் நிதிநிலை அறிக்கையில், சிப்காட் தொழிற்பூங்காக்களை உருவாக்குவதற்காக 45,000 ஏக்கர் நிலங்களைக் கொண்ட நிலவங்கி அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் சென்னை வண்டலூரில் தொடங்கி மீஞ்சூர் வரையிலான சென்னை வெளிவட்டச் சாலையை ஒட்டி அமைந்திருக்கும் ஆவடி வட்டம் வெள்ளானூர் கிராமம், பொன்னேரி வட்டம் கும்மனூர் கிராமம் ஆகியவற்றில் மொத்தம் 253.44 ஹெக்டேர், அதாவது 626 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த சிப்காட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதற்கான நிர்வாக ஒப்புதலை தமிழக அரசிடமிருந்து பெற்றுத் தரக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எழுதியுள்ள கடிதம் தான் அப்பகுதி மக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சிப்காட் நில வங்கிக்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் அனைத்தும் குடியிருப்புப் பகுதி என்பதும், சிப்காட் திட்டத்தின்படி நிலம் கையகப்படுத்தப்பட்டால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப் படும் என்பதும் தான் மக்களிடையே அச்சமும், கவலையும் ஏற்பட்டிருப்பதற்கு காரணம் ஆகும். சிப்காட் நிலவங்கி அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வெள்ளானூர், கும்மனூர் ஆகிய இரு கிராமங்களுமே சென்னை வெளிவட்டச் சாலைக்கு அருகில் அமைந்திருப்பதால் வேகமாக வளர்ந்து வருகின்றன. சென்னையில் தங்களுக்கென வீடுகளை வாங்க முடியாதவர்களின் அடுத்த இலக்காக இந்தப் பகுதிகள் தான் உள்ளன. சிப்காட் நிறுவனத்தால் கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 626 ஏக்கரில், 488 ஏக்கர் நிலங்கள் வெள்ளானூர் கிராமத்திலும், மீதமுள்ள 138 ஏக்கர் நிலங்கள் கும்மனூர் கிராமத்திலும் அமைந்துள்ளன.
வெள்ளானுர் கிராமத்தில் கையகப்படுத்தப்படவுள்ள 488 ஏக்கர் நிலங்களில் சுமார் 59 ஏக்கர் நிலங்கள் அரசு புறம்போக்கு நிலங்கள். மீதமுள்ள 428.86 ஏக்கர் நிலங்கள் குடியிருப்புப் பகுதிகள் ஆகும். அவற்றில் 2000&க்கும் கூடுதலான வீடுகள் உள்ளன. அவை தவிர 5000&க்கும் கூடுதலான வீட்டு மனைகளை பல்வேறு தனிநபர்கள் வாங்கி, வீடு கட்டத் தயாராகி வருகின்றனர். மேலும் தனியார் பாலிடெக்னிக் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் அங்கு அமைந்திருக்கின்றன. அரசு புறம்போக்கு நிலம் என குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியிலும் வண்டிப் பாதை, வாய்க்கால் பாதை, சாலை, சுடுகாடு ஆகியவையும் உள்ளன. அவை இல்லாமல் மக்களால் வாழமுடியாது. வெள்ளானூரில் 488 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் 7,000 குடும்பங்கள் வெளியேற நேரிடும்.
அதேபோல், கும்மனூர் கிராமத்தில் கையகப்படுத்தப்படவிருக்கும் 138 ஏக்கரில் 134.31 ஏக்கர் நிலங்கள் குடியிருப்புப் பகுதிகள் ஆகும். அந்தப் பகுதியில் 3000&க்கும் மேற்பட்ட வீடுகளும், வீட்டு மனைகளும் உள்ளன. அந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அப்பகுதியை விட்டு அகதிகளாக வெளியேற வேண்டிய நிலை உருவாகும். அதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது.
பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கூறி வருவதைப் போல, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கோ, சிப்காட் வளாகங்கள் அமைக்கப்படுவதற்கோ நாங்கள் எதிரிகள் அல்ல. தமிழகத்தின் பல மாவட்டங்களில் சிப்காட் வளாகங்கள் அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வெற்றி பெற்றுள்ளது. ஆனால், சிப்காட் வளாகங்களை அமைப்பதற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தியும், போராடியும் வருகிறது. தொடக்கத்தில் சிப்காட் வளாகங்களை அமைப்பதற்காக புறம்போக்கு நிலங்களையும், எதற்கும் பயன்படாமல் கிடந்த தரிசு நிலங்களையும் மட்டும் அரசு கையகப்படுத்தி வந்தது. அடுத்தக்கட்டமாக, விளைநிலங்களை கையகப்படுத்தத் தொடங்கியது. அதற்கே பொதுமக்கள் மத்தியிலும், உழவர்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக மக்கள் குடியிருக்கும் வீடுகளையும், வீடு கட்டுவதற்கான மனைகளையும் அரசு கையகப்படுத்துகிறது என்றால் மக்கள் மீது எந்த அக்கறையுமே இல்லை என்பது தான் உண்மை.
அதையும் கடந்து சுடுகாடு உள்ளிட்ட பொதுப்பயன்பாட்டு நிலங்களையும் கையகப்படுத்த சிப்காட் நிர்வாகம் துடிப்பது பொதுமக்கள் மீது நடத்தப்படும் ஈவு இரக்கமற்ற கொடிய தாக்குதல் ஆகும். சிப்காட் நிலவங்கிக்காக பயன்படாத நிலங்களை கையகப்படுத்த வேண்டும். வெள்ளானூர், கும்மனூர் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால், பாதிக்கப்படும் மக்களைத் திரட்டி, மண்ணைக் காக்க மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார்.