அனைத்து குடும்பங்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம்...!
100 யூனிட் இலவச மின்சாரம், அனைத்து மக்களுக்கும் குறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர வாடகைதாரர்களுக்கும் தொடர்ந்து கிடைத்திட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அதிமுக ஆட்சியில், மின் கட்டணம் செலுத்துவதற்கு 20 நாட்கள் கால அவகாசம் உள்ள நிலையில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால், மின் துறை ஊழியர்கள் – ஹெல்ப்பர், லைன்மேன் மற்றும் போர்மேன் போன்றவர்கள் நேரில் சென்று மின் கட்டணம் கட்டாதவர்களிடம், உடனடியாக மின் கட்டணம் செலுத்தாவிட்டால் உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறி மின் கட்டணத்தை செலுத்த வைப்பார்கள். மின் கட்டண இணைப்பு துண்டிக்கப்பட்டால் Disconnect charges மற்றும் Reconnect charges என்று 60 ரூபாய் வசூலிப்பார்கள்.
தற்போது இந்த திமுக ஆட்சியில், மின்சாரத் துறையில் ஆட்கள் பற்றாக்குறையால் மின் கட்டணம் செலுத்த இயலாதவர்களிடம் நேரில் சென்று மின் கட்டணம் கட்ட கடைசி நாள் என்ற எச்சரிக்கையை யாரும் தெரிவிப்பதில்லை என்றும், Disconnect charges மற்றும் Reconnect charges-களை பல மடங்கு உயர்த்திவிட்டதாகவும் செய்திகள் தெரிய வருகிறது.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், தமிழக மின்சார வாரியமும், எரிசக்தித் துறையும், குரங்கு கையில் கிடைத்த பூ மாலையாக மாறி, சிக்கி சீரழிவது வாடிக்கையாகிவிட்டது. தனியாரிடமிருந்து மின் கொள்முதல், மின் மாற்றிகள் மற்றும் மின் உபகரணங்கள் கொள்முதல், நிலக்கரி கொள்முதல் என்று எல்லா வகைகளிலும் கொள்ளையடிப்பதற்காகவே, செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவது, வசன வியாபாரிகள் அரசின் அடிப்படைக் கொள்கையாக இருக்கிறது. இதனால், மக்கள் அன்றாடம் இருளில் தவிக்கும் சூழல் ஏற்படுகிறது.
2016, சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம், ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட 100 யூனிட் விலையில்லா மின்சாரம், அனைத்து மக்களுக்கும் குறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர வாடகைதாரர்களுக்கும் தொடர்ந்து கிடைத்திட வேண்டும். அதிமுக ஆட்சியின் போது இருந்த நிலைமையே தொடர வேண்டும் என்றும், மின் இணைப்பு துண்டிப்பை சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்களுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே தெரிவித்து, அவர்கள் மின் கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.