ஆளுநர் ரவி, அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்வில் 10 லட்ச ரூபாய் திருட்டு.! காவல்துறையிடம் புகார் அளித்த பாரதிய ஜனதா மாநிலச் செயலாளர்.!
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் இல்ல திருமண விழாவில் 10 லட்ச ரூபாய் திருடு போன சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த திருமண விழாவில் பாரதி ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஆகியோர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் இருப்பவர் அஸ்வத்தாமன். இவரது தங்கையின் திருமண நிகழ்வு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வைத்து நடைபெற்றது. இந்த திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக ஆளுநர் ரவி உட்பட பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிலையில் திருமணத்திற்கு முந்தைய வரவேற்பு நிகழ்ச்சியின் போது அஸ்வத்தாமன் அவர்களின் தாயார் வைத்திருந்த ஹேண்ட் பேக் திருடு போன சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அந்தக் கைப்பையில் அவர் 10 லட்ச ரூபாய் வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திருமண மேடையில் மணமக்களுடன் இருந்த அவர் தனது கையில் வைத்திருந்த பையை கீழே வைத்துவிட்டு மணமகளின் நகைகளை சரி செய்து இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து தனது கைப்பை தேடிய போது காணாமல் போய் இருப்பதை அறிந்த அவர் இது தொடர்பாக தனது மகனிடம் தெரிவித்தார். கல்யாண மண்டபம் எங்கும் தேடியும் கிடைக்காததால் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் திருமண நிகழ்வின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருடர்களை தேடி வருகின்றனர். திரு அண்ணாமலை மற்றும் ஆளுநர் ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பத்து லட்ச ரூபாய் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.