மிசோரம் : கனமழையால் கல்குவாரியில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழப்பு..! அடியில் பலர் சிக்கியதால் பரபரப்பு!!
மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழந்தனர். ரெமல் புயல் காரணமாக ஐஸ்வால் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
நாட்டின் கிழக்குப் பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ரெமல் புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் கடற்கரைகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கரையைக் கடந்தது. இந்நிலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து, காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) அனில் சுக்லா கூறுகையில், “இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், கனமழையால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளும் மூடப்பட்ட நிலையில், அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பல நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகள் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தனர்.
ஹன்தாரில் தேசிய நெடுஞ்சாலை 6ல் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஐஸ்வால், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. ரீமல் புயல் மேற்கு வங்கத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. பல்வேறு இடங்களில் மீன் கம்பங்கள் கீழே சரிந்ததை அடுத்து, அவற்றை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலான இடங்களில் மரங்கள் வேரோடு சரிந்துள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். புயல் தாக்குவதற்கு முன்பாக மேற்கு வங்கத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே, அடுத்த இரண்டு நாட்களுக்கு அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Ajithkumar | இணையத்தில் படு வைரலாகி வரும் அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!