50,000 ஊழியர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை..!! அதிரடியாக அறிவித்த இந்திய நிறுவனம்..!! ஏன் தெரியுமா..?
இந்தியாவில் செயல்பட்டு வரும் உலகின் முன்னணி நிறுவனம் 50,000 ஊழியர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் 'கிரண் ஜெம்ஸ்' என்ற நிறுவனம் வைரங்கள் உற்பத்தி மற்றும் பாலிஷ் தொழிலில் உலகளவில் கொடிகட்டி பறந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் ஓராண்டு நிகர வருவாய் சுமார் ரூ.17,000 கோடியாகும்.
இந்நிறுவனம் தான், தனது 50 ஆயிரம் ஊழியர்களுக்கும் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மொத்தம் 10 நாட்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. எந்த நிறுவனமும் இது போல ஒரே நேரத்தில் தங்களது மொத்த ஊழியர்களுக்கும் ஒரு நாள் விடுமுறை கொடுக்கப்பட்டதே இல்லை. ஆனால், இந்த நிறுவனம் எதற்காக 10 நாட்களுக்கு விடுமுறை தர வேண்டும் என்பது ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரைத் தொடர்ந்து, ரஷ்யாவில் இருந்து பெறப்படும் வைரங்களுக்கு அமெரிக்காவும் ஜி7 உறுப்பு நாடுகளும் தடை விதித்துள்ளன. அந்நாடுகளின் முடிவு இந்திய வைரத் தொழில்நிறுவனங்களில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. உலக அளவில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கான விலையும் சரிந்துள்ளதால், வைர நிறுவனங்கள் தொழிலைத் தொடர்ந்து நடத்த சிரமப்படுவதாகவும் கிரண் ஜெம்ஸ் நிறுவனத்தின் தலைவர் வல்லபாய் லக்கானி கூறியுள்ளார்.