1.4 லட்சம் மொபைல் எண்கள் சைபர் கிரைம் குற்றங்களுக்காக முடக்கப்பட்டது.! விரிவான தகவல்.!
சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்ட சுமார் 1.4 லட்சம் மொபைல் எண்கள் சமீபத்தில் அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளது. நிதி சேவைத் துறையில் இணைய பாதுகாப்பை குறித்து ஆலோசிக்க, நிதிச் சேவைகள் செயலர் விவேக் ஜோஷி தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அந்த கலந்தாய்வு கூட்டத்தில், ஏபிஐ (API) ஒருங்கிணைப்பு மூலம் சிட்டிசன் ஃபைனான்சியல் சைபர் ஃபிராட் ரிப்போர்ட் அண்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (CFCFRMS) தளத்தில் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை ஒருங்கிணைப்பதைப் பற்றியும் விவாதித்தனர்.
நிதி மோசடி மற்றும் சைபர் கிரைம் குற்றங்களுக்காக பயன்படுத்தப்பட்ட 1.4 லட்சம் மொபைல் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் நடந்த முந்தைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட திட்டங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
டிஜிட்டல் கட்டண மோசடி மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பான சவால்களை சமாளிக்க, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தயார் நிலையை பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு கொண்டு தொலைத் தொடர்புத் துறை, ஏஎஸ்டிஆர் என்னும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. இந்த இயந்திரம் போலியான ஆவணங்களை வைத்து பெறப்பட்ட மொபைல் இணைப்புகளை கண்டறிய உதவுகிறது எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தொலை தொடர்பு துறை, மொத்தமாக எஸ்எம்எஸ் அனுப்பவும் 35 லட்சம் நிறுவனங்களை ஆய்வு செய்தது. தீங்கிழைக்கும் எஸ்எம்எஸ்களை அனுப்பும் 19,776 நிறுவனங்களை கண்டறிந்து அவற்றை தடுப்பு பட்டியலில் சேர்த்துள்ளனர். மேலும் 30,700 SMS தலைப்புகள் மற்றும் 1,95,766 SMS டெம்ப்ளேட்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை வழக்கமான 10-இலக்க எண்களில் இருந்து '140xxx' போன்ற குறிப்பிட்ட எண் வரிசைகளுக்கு மாற்றுவது குறித்து TRAI பரிந்துரைத்தது.