வாக்களிப்பில் உலக சாதனை : இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பெருமிதம்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி மற்றும் 7ஆவது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உள்பட இந்திய தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்தனர் என்பதை குறிப்பிட்டார். உலகிலேயே இந்தியாவில் அதிக வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது என்றும் அவர் கூறினார். தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மேலும் கூறுகையில், “சமூக ஊடகங்களில் காணாமல் போன ஜென்டில்மேன் (தேர்தல் ஆணையம்) திரும்பி வந்துள்ளார் என்ற மீம்ஸை நீங்கள் பார்ப்பீர்கள். ஆனால் நாங்கள் ஒருபோதும் காணாமல் போகவில்லை என்று கிண்டலாக பதில் அளித்தார்.
1.5 கோடி வாக்குச் சாவடிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் பயன்பாட்டுக்காக 135 சிறப்பு ரயில்கள், 4 லட்சம் வாகனங்கள், 1,692 குடியிருப்புகள் பயன்படுத்தப்பட்டன. 68,763 கண்காணிப்புக் குழுக்கள் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டன. 2024 தேர்தலில் இந்திய வாக்காளர்கள் வரலாறு படைத்துள்ளனர்.
31 கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். 642 மில்லியனுக்கும் ((64 கோடி) அதிகமான வாக்குள் பதிவாகி உலக சாதனையை படைத்துள்ளோம். இது அனைத்து ஜி-7 நாடுகளின் வாக்காளர்களை விட 1.5 மடங்கு அதிகம். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளின் வாக்காளர்களை விட 2.5 மடங்கு அதிகமாகும்” என்றார்.
மேலும், இந்த மக்களவைத் தேர்தலில் மறு வாக்குப்பதிவுகள், வன்முறை, வாக்குக்கு பணம் கொடுக்கும் சம்பவங்கள், செயற்கை நுண்ணறிவு மூலமாக போலி செய்தி பரப்புதல் போன்றவை குறைந்துள்ளன. வாக்காளர்களின் எண்ணிக்கை, அனைத்து தரப்பினரும் பங்கெடுத்தது, தொழில்நுட்ப பயன்பாடு, பறிமுதல்கள் போன்றவை அதிகரித்துள்ளன.” என தேர்தல் ஆணையர்கள் தெரிவித்தனர்.
https://twitter.com/ANI/status/1797529488324177952
Read more ; ‘இதுதான் உலகின் மிக ஆபத்தான தீவு!!’ உள்ளே சென்றால் உயிருடன் திரும்ப முடியாது!