முழுவதும் இலவசம்... நாளை 10 முதல் 4 மணி வரை சிறப்பு முகாம்...! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே...
கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நாளை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் கைத்தறி நெசவாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நல்வாழ்வினை கருத்திற் கொண்டும், கைத்தறி நெசவாளர்களை நோய்களில் இருந்து பாதுகாக்கவும், அவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வருடாந்திர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் கைத்தறி துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, காஞ்சிபுரம் சரகம் இணைந்து காஞ்சிபுரத்தில் நாளை காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ஸ்ரீ லட்சுமி கோவிந்தராஜு மஹாலில் மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது.
மேற்படி மருத்துவ முகாமில், முன்னுரிமை சிகிச்சைகளான பொது மருத்துவம் (நரம்பியல்/நீரிழிவு), இருதய நோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், கண் மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், குடல் மருத்துவம் மற்றும் மருத்துவ பரிசோதனைகளான பொது மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது.
மருத்துவ ஆலோசனை, உடல் பருமன் பரிசோதனை (எடை உயரம் விகித குறியீடு BMI), இரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறிதல், எலும்பு, சிறுநீரகம் முழுமையான இரத்த பரிசோதனை, பொது சுகாதாரம், மகளிர் சுகாதாரம். ஆரோக்கியமான உணவுகள் மற்றும் வரும் இதர மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே நெசவாளர்களும் அவர்கள் குடும்பத்தினரும் தவறாது மருத்துவ முகாமில் கலந்துக்கொண்டு பயன் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.