'மீண்டும் சன் டிவியில் இராமாயணம் சீரியல்! தலைவலியாக மாறிய புரமோ!
முன்னணி தொலைக்காட்சியான சன் டிவியில், இராமாயணம் நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்ப உள்ளது. ’ சீதையின் இதயநாயகன் ‘ என்ற பெயரில் விரைவில் தொடங்க உள்ளது.
பழங்கால சமஸ்கிருத காவியாங்களில் ஒன்று, இராமாயணம். இந்த காவியத்தின் கதை கிமு 500 முதல் கிமு 100 வரை நடைபெற்றது. தெரிந்த கதையாக இருந்தாலும் ‘மகாபாரதம்’, ‘இராமாயணம்’ போன்ற இதிகாச கதைகளை எத்தனை முறை சீரியலாகவும் படமாகவும் எடுத்தாலும் மக்கள் அதைப் பார்ப்பதை தவிர்ப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு, முன்னணி தொலைக்காட்சியான சன் டிவியில், இராமாயணம் நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்ப உள்ளது. ’ சீதையின் இதயநாயகன் ‘ என்ற பெயரில் விரைவில் தொடங்க உள்ளது. ஆனால் எந்த நாளில் தொடங்கும், எத்தனை நாட்கள் வாரத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற தகவல் தொடர்பான அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.
ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 'இராமாயணம்’ ஒளிபரப்பானது. தற்போது ஒளிபரப்பாக உள்ள இராமாயணம் அதே தானா? அல்லது மீண்டும் எடுக்கப்பட்டதா என்பது குறித்த அறிவிப்பு இன்னும் தெரியவில்லை. இதற்காக புரமோ ஒன்றையும் சேனல் தரப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், அதுவே அவர்களுக்கு தலைவலியாக மாறி இருக்கிறது.
ஏனெனில், தேர்தலுக்கு முன்பு பாஜக மதவாத அரசியல் செய்கிறது என்ற கடும் வாதத்தை திமுக முன்வைத்து எதிர்த்து வந்தது. அயோத்தி ராமர் கோயிலும் மோடியின் அரசியல் அஸ்திரம் என்றே சொல்லி வந்தது. ’அப்படியெல்லாம் சொன்னவர்கள் இப்போது தேர்தல் முடிந்ததும் டிஆர்பி-க்காக தங்கள் சேனலிலேயே ‘இராமாயணம்’ கதையை சீரியலாக ஒளிபரப்புவதா?’ என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த இராமாயணம் தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமுருகன் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “ஆரிய ஆதிக்கத்தின் அடையாளத்தை தமிழர் மண்ணில் விதைக்க முயலும் சன் நிறுவனத்தின் துரோகத்தனமான வணிகத்திற்கு எதிராக அணி திரளுவோம். திராவிட இயக்கத்தின் உழைப்பில் வளர்ந்து, பெரியாரின் அரசியலில் அதிகாரத்தை பிடித்து, தமிழ்நாட்டின் அரசியலின் வேருக்கு நஞ்சு பாய்ச்ச நினைப்பவர் எவராயினும் அவர் எம் பகைவரே.
வடவர் மதவெறி அரசியலை தமிழ்நாட்டில் வளர்க்க நினைக்கும் எவரும் எம் இனத்தின் துரோகிகளே. பெரியாரின் சீடர்கள் செத்துவிடவில்லை சன் குடும்பத்தாரே! சமரசமற்ற எம் தோழர்கள் கருப்பு சட்டையுடன் களத்தில் எதிர்கொள்வோம் உம் ஈனச்செயலை!! தேர்தல் முடியும் வரை காத்திருந்து கழுத்தறுக்க நினைக்கும் உம் அயோக்கியத்தனத்திற்கு தமிழினம் தக்கவகையில் பதில் சொல்லும்!” என கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுமட்டுமின்றி இராமயாணம் தொடருக்கு எதிராக மீம்ஸ்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இது திமுக-விற்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது.