மக்களே உஷார்..! லைக் செய்தால் போதும் பணமழை கொட்டும்....
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் அந்த தனியார் கல்லூரி பேராசிரியர். இவரது செல்போன் எண்ணுக்கு டெலகிராம் செயலி மூலம் பகுதி நேர வேலைவாய்ப்பு இருப்பதாக லிங்க் ஒன்று வந்துள்ளது. அதனுள் நுழைந்தபோது குறிப்பிட்ட வீடியோவை பார்த்து லைக் செய்தால் வங்கி கணக்கில். பணம் செலுத்தப்படும் என தகவல் வந்துள்ளது.
இதனை நம்பிய பேராசிரியர் வீடியோவை பார்த்து லைக் செய்துள்ளார். அப்பொழுது அவரது வங்கி கணக்கிற்கு 500 ரூபாய் பணம் வந்துள்ளது. இதனை தொடர்ந்து, குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் அடுத்தடுத்து வீடியோக்கள் அனுப்பப்படும் என்றும் அந்த வீடியோக்களை பார்த்து லைக் செய்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தையாக கூறப்பட்டதுள்ளது.
அதை, நம்பி பேராசிரியர் 3ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம் என அடுத்தடுத்த செலுத்தி வீடியோக்களை பெற்றுள்ளார். அவற்றை பார்த்து லைக் செய்தபோது, 500, 2 ஆயிரம் ரூபாயாக கூடுதலாக பணம் கிடைத்துள்ளது. இதனைக் கண்டு மகிழ்ந்து போன அவர், 2 முறை தலா 50 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளார். அதற்கும் பணம் வந்துள்ளது.
இதையடுத்து லட்சக்கணக்கில் கட்ட ஆரம்பித்திருக்கிறார் பேராசிரியர். இப்படியாக 17 லட்சம் ரூபாய் வரை கட்டியுள்ளார். அதன் பின், அவர் பல வீடியோக்களை பார்த்து லைக் செய்து பணத்திற்காக காத்திருந்தார். காத்திருந்த பேராசியருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதன்பின் அந்த மர்மநபர் எஸ்கேப் ஆகி விட்டார். அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பேராசிரியர் ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தேடுதல் வேட்டையில் இறங்கினர். அதன்பின், சேலத்தைச் சேர்ந்த நந்தகோபால் மற்றும் சாமிநாதன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.