பெரும் சோகம்..!! 'தில்லானா மோகனாம்பாள்’ புகழ் பொன்னுசாமி காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!
'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் ஒலித்த நாகஸ்வர இசையை தனது சகோதரர் எம்.பி.என்.சேதுராமனுடன் இணைந்து இசைத்த நாகஸ்வரக் கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி மதுரையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 90.
1968ஆம் ஆண்டு வெளியான 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, பாலையா, நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை ஏ.பி.நாகராஜன் இயக்கியிருந்தார். கே.வி.மகாதேவன் இசையில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும், இந்த படத்தில் இடம் பெற்ற 'நலந்தானா' என்ற பாடல் இன்றும் பல படங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் இடம்பெற்ற நாகஸ்வர காட்சிகள் அனைத்துமே பெரிய அளவில் பாராட்டுக்களைப் பெற்றது. இதில் திரையில் சிவாஜியும் அவரது குழுவினரும் தான் இதை இசையமைத்தாக ரசிகர்களுக்கு தெரிந்திருந்தாலும், உண்மையாக நாகஸ்வரம் வாசித்தவர்கள் மதுரையைச் சேர்ந்த நாகஸ்வர வித்வான்களான எம்.பி. என்.சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள் தான்.
காரைக்குடி திருமண விழாவில் இவர்கள் இருவரும் இணைந்து நாகஸ்வரம் வாசித்தபோது ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றனர். 1977ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு எம்.பி.என்.பொன்னுசாமிக்கு கலைமாமணி விருதை வழங்கியது. 1997ஆம் ஆண்டு கிருஷ்ண கான சபாவின் சங்கீதா சூடாமணி விருதை பெற்றார். இந்நிலையில், வயது மூப்புக்காரணமாக நாகஸ்வரக் கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி மதுரையில் நேற்று காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.