தமிழக அரசிடமிருந்து கோரிக்கை எதுவும் வரவில்லை...! வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் அதிரடி...!
2024-ஆம் ஆண்டு பருவத்தில் மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரைத் தேங்காய் மற்றும் தோல் நீக்கிய தேங்காயை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசிடமிருந்து கோரிக்கை எதுவும் வரவில்லை என மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறியுள்ளார்.
மாநிலங்களவையில், எம்.பி வைகோ மற்றும் எம் சண்முகம் ஆகியோர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த அவர், பிரதமரின் ஆஷா திட்டத்தின் கீழ், நியாயமான சராசரி தரம் வாய்ந்த எண்ணெய் வித்துக்கள், கொப்பரைத் தேங்காய் போன்றவற்றை தேசிய வேளாண் கூட்டுறவு, சந்தைப்படுத்துதல், கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு, நுகர்வோர் கூட்டுறவு ஆகியவற்றின் மூலம் கொள்முதல் செய்வதாகத் தெரிவித்தார். மாநில அரசுகள் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ், சந்தைவிலை குறையுமானால் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் கொள்முதல் செய்ய கோரிக்கை வைப்பது உண்டு என அவர் தெரிவித்தார்.
சராசரி தரம் கொண்ட அரவைக் கொப்பரைத் தேங்காயின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 11,160 ரூபாய் எனவும், முழு கொப்பரைத் தேங்காயின் விலை குவிண்டாலுக்கு 12,000 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் மதிப்பீட்டின்படி, அரவைக் கொப்பரைத் தேங்காய்க்கு 51.84 சதவீதமும், முழு கொப்பரைத் தேங்காய்க்கு 63.26 சதவீதமும் லாபம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.