முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிக்கு தடை...! தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை...! அன்புமணி கடிதம்...!

07:10 AM Nov 06, 2023 IST | 1newsnationuser2
Advertisement

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவும், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் தேசிய மருத்துவ ஆணையம் விதித்திருக்கும் தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவரும், மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது குறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில்; இந்தியாவில் எந்த மாநிலமாக இருந்தாலும் 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அதற்கும் கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ, மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்திருக்கிறது. இதற்கான இளநிலை மருத்துவக் கல்வி புதிய விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் கடந்த 16.08.2023-ஆம் நாள் மத்திய அரசிதழில் வெளியிட்டிருக்கிறது. இந்த புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் தமிழ்நாடு, கேரளம் போன்ற வளர்ச்சியடைந்த தென் மாநிலங்களையே பாதிக்கும்.

2021-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மக்கள்தொகை ஏறக்குறைய 7.64 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த மக்கள்தொகைக்கு தமிழ்நாட்டில் அதிக அளவாக 7,640 மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே இருக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் இன்றைய நிலையில், 11,600 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. அதனால், இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது; அதுமட்டுமின்றி, இப்போது இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களையும் ஏற்படுத்த முடியாது. புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், தெலுங்கானம் ஆகிய தென்மாநிலங்களுக்கும் இதே நிலை தான் ஏற்படும். தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை மிகவும் பிற்போக்கானது; இதை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குதல், மருத்துவர்களை உருவாக்குதல், மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரித்தல் ஆகியவற்றை மக்கள்தொகையுடன் ஒப்பிடுவதே தவறு ஆகும். மருத்துவக் கல்வியும், மருத்துவ சேவையும் தேவைகளின் அடிப்படையில் தான் இருக்க வேண்டுமே தவிர, மக்கள்தொகை அடிப்படையில் இருக்கக் கூடாது. இதை மருத்துவ ஆணையம் உணர வேண்டும்.

மருத்துவக் கல்லூரிகள் எனப்படுபவை மருத்துவ மாணவர்களை உருவாக்குவதற்கான கல்விக்கூடம் மட்டுமல்ல. மருத்துவக் கல்லூரிகள் மூலம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கிடைக்கும் மருத்துவ சேவை என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. எடுத்துக்காட்டாக, 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் கொண்ட மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றால், அதனுடன் இணைக்கப்பட்ட மருத்துவமனையில், தினமும் 1200 பேருக்கு புறநோயாளிகளாக இலவச மருத்துவம் வழங்கப்பட வேண்டும்; நூலகங்களில் குறைந்தது 11 ஆயிரம் மருத்துவ நூல்கள் வைக்கப்பட வேண்டும். இவற்றின் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க முடியும். புதிய விதிகள் மூலம் இந்த வசதிகளை பறிக்கக்கூடாது.

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்றால், அது அந்த மாநிலங்களின் அரசுகள் பல பத்தாண்டுகளாக திட்டமிட்டு, தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயன் ஆகும். அதற்காக அந்த மாநில அரசுகளை மத்திய அரசும், மருத்துவ ஆணையமும் பாராட்ட வேண்டுமே தவிர, இதுபோன்ற கட்டுப்பாடு விதித்து தண்டிக்கக்கூடாது.மக்கள்தொகையை கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்கு அதிக மக்களவைத் தொகுதிகளை வழங்குவோம்; மக்கள்தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்போம் என்பதற்கும், இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. சிறப்பாக செயல்படும் மாநிலங்களைத் தண்டிக்கும் போக்கு தொடர்ந்தால், அது இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக மாறும்.

எனவே, 10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் என்ற விகிதத்திற்கும் கூடுதலாக உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடையாது; கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் கூடாது என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுமாறு ஆணையிட வேண்டும். அதன்மூலம் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவை வளர்ச்சிக்கு வகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Tags :
anbumanicentral govtmedical collegeMedical councilTamilnadu
Advertisement
Next Article