இன்று ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மோடி!!
1962-ம் ஆண்டுக்குப் பிறகு மத்தியில் ஆளும் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை இன்று சந்தித்து மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி புதிய ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் பிரதமர் மோடி. மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களில் மட்டும் வென்றது. மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் 272. பாஜகவால் தனித்து 272 இடங்களைப் பெற முடியாமல் போனாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மைக்கு அதிகமான இடங்கள் உள்ளன; சுயேட்சை எம்பிக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக தலைவர்கள், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜேடியூ தலைவர் நிதிஷ்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
இதனைத் தொடர்ந்து டெல்லியில் பாஜக எம்பிக்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாஜக நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்படுகிறார். இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் ஆதரவு கடிதத்துடன் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்திக்கிறார் நரேந்திர மோடி. இந்த ஆதரவு கடிதங்களைக் கொடுத்து மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறார் நரேந்திர மோடி.
நாட்டின் முதல் பொதுத் தேர்தல் 1952-ல் நடைபெற்றது. 1962-ம் ஆண்டு வரை மத்தியில் ஆளும் கட்சிதான் அடுத்தடுத்து தொடர்ந்து 3 முறை புதிய ஆட்சியை அமைத்தது. தற்போது அதே வரலாறு திரும்பியுள்ளது. 2014-ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் பாஜக ஆட்சி அமைத்தது. 2019 தேர்தலிலும் வென்று பாஜக ஆட்சியே அமைந்தது. தற்போது 3-வது முறையாக மத்தியில் ஆளும் கட்சியே புதிய ஆட்சியை அமைக்க இருக்கிறது. இதனை பிரதமர் மோடி, பாஜகவினருக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் சுட்டிக்காட்டியும் இருந்தார்.
Read More: ‘நடிகை கங்கனா ரணாவத் கன்னத்தில் அறைவிட்ட CISF வீரர்!’ விளக்கம் அளித்த கங்கனா!!