சென்னையில் கனமழை..! அமைச்சர்கள், MLA-களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு...!
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெற்று புதிய புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, வடகிழக்கு பருவமழை தொடங்கயுள்ள நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை. காவல்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி துறை மற்றும் பேரூராட்சிகள், சார்ந்த அலுவலர்களுடன் 24×7 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
இந்த நிலையில் கனமழை பாதித்த இடங்களுக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் சென்று மக்கள் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.