கேப்டனுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மதியம் 12 மணி வரை கடைகள் மூடல்...!
விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மதியம் 12 மணி வரை கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறைவு காரணமாக நேற்று காலமானார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், தேமுதிக கட்சியினர், பொதுமக்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும்உள்ள அவரது ஆதரவாளர்கள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவரும் அவரது திருஉருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அவரது உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லாமல் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த தேமுதிக தொண்டர்கள் மொட்டை அடித்து, துக்க பாட்டு பாடி அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல தமிழகம் முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜயகாந்தின் நினைவை போற்றும் வகையிலும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மதியம் 12 மணி வரை கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.