மாசு ஏற்படுத்துவதில் வீடுகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் முக்கிய பங்கு...! சென்னை ஐஐடி அதிர்ச்சி தகவல்...!
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) நடத்திய ஆய்வில், மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான அதே நேரத்தில் கவனிக்கப்படாத மைக்ரோபிளாஸ்டிக்குகள்தான் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவை செல்லக்கூடிய பாதை, உருமாற்றம் மற்றும் நீர்வாழ் உயிரினங்களிடமும், மனிதர்களிடமும் ஏற்படுத்தும் நச்சுத்தன்மை விளைவுகள் ஆகியவற்றை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது
சுற்றுச்சூழலில் மைக்ரோபிளாஸ்டிக் பரவுவதற்கு பங்களிக்கும் பல்வேறு ஆதாரங்களில், மாசடைந்த கழிவு நீர் ஒரு முக்கிய ஆதாரமாக நிற்கிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது. அன்றாட வீட்டுச் செயல்பாடுகளான பாத்திரங்களைக் கழுவுதல், துணி துவைத்தல், குளித்தல், கழிப்பறைகளைப் பயன்படுத்துதல் போன்ற அனைத்தும் மாசடைந்த கழிவுநீரின் உற்பத்திக்கு பங்களிக்கின்றன.
உதாரணமாக, பாத்திரங்களைக் கழுவ பிளாஸ்டிக்கால் ஆன துடைக்கும் பட்டைகள் (scouring pads) பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் மென்மையான பகுதி பாலியூரிதீன் (PU), மெஷ் பகுதி பாலிஎத்திலின் (PE) ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டவை. நாட்கள் செல்லச்செல்ல ஸ்பான்ஞ் தேய்ந்து, பிளாஸ்டிக் பொருட்கள் உதிர்வதால் இரண்டாம் மைக்ரோபிளாஸ்டிக் உருவாக்கத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது