உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 450 ரூபாய்க்கு சமையல் காஸ் சிலிண்டர்...! பாஜக சூப்பர் அறிவிப்பு...!
மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டது. கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் வி.டி.சர்மா ஆகியோர் முன்னிலையில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையில், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோதுமை ரூ.2,700க்கும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,100க்கும் கொள்முதல் செய்யப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. லட்லி பெஹ்னா மற்றும் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 450 ரூபாய்க்கு சமையல் காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிசான் சம்மான் மற்றும் முதல்வர் கிசான் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மொத்தம் 12,000 ரூபாய் வழங்கப்படும்.
230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப் பேரவைக்கு நவம்பர் 17-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது, அதன் முடிவுகள் டிசம்பர் 3-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.