இந்தியாவில் சரிந்த அரிசி விலை.! ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் தான் காரணமா.?
செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது பாஸ்மதி அரிசியின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐரோப்பாவிற்கு செல்லும் பெரும்பாலான சரக்கு கப்பல்கள் செங்கடல் வழியாகவே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இஸ்ரேல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக தாக்கி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதிகளில் சரக்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதி குறைந்துள்ளது. பெரும்பாலான கப்பல் நிறுவனங்கள் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு பயந்து சூயஸ் கால்வாய் வழியான சரக்கு போக்குவரத்தை நிறுத்தி இருக்கின்றன. இதனால் பாஸ்மதி அரிசியின் விலை ஐந்து முதல் பத்து சதவீதம் குறைந்துள்ளது. மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சூரியகாந்தி எண்ணெயும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவற்றின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து கப்பல் போக்குவரத்திற்கான கட்டணம் பெருமளவில் உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு செல்லும் சரக்கு கப்பல்களில் ஒரு கண்டெய்னருக்கு 850 டாலராக இருந்த கட்டணம் தற்போது 2400 டாலராக அதிகரித்து இருக்கிறது, மேலும் இந்தியாவிலிருந்து டர்பனுக்கு செல்லும் ஒரு கண்டைனருக்கான கட்டணம் 700 டாலரில் இருந்து 1200 டாலராக அதிகரித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் கடும் விலை உயர்வு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.