அதிர்ச்சி! "2040-க்குள் புற்றுநோய் பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரிக்கும்.." - ஆய்வில் தகவல்!
இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக உயரும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்திய பன்னாட்டு சுகாதாரக் குழுமமான அப்பல்லோ மருத்துவமனை குழுமம், கடந்த மாதம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெற்காசிய நாட்டை உலகின் புற்றுநோய் தலைநகரம் என குறிப்பிட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த சுகாதாரம் குறைந்து வருவதற்கான ஆபத்தான அறிகுறியை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது.
கடந்த 2020ம் ஆண்டில் சுமார் 1.4 மில்லியனாக இருந்த வருடாந்திர புற்றுநோய் பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 2025ம் ஆண்டில் 1.57 மில்லியனாக உயரும் என இந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் ஆகியவை பெண்களை பாதிக்கும் மிகவும் பொதுவான புற்றுநோய்களாகும்.
இதுகுறித்து, இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் கே. ஸ்ரீநாத் ரெட்டி கூறுகையில், "புற்று நோயாளிகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. அடுத்த 20 ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
டெல்லி மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மைய இயக்குனர் அசித் அரோரா கூறுகையில், "நான் இதை ஒரு தொற்றுநோய் என அழைக்க விரும்பவில்ல. ஆனால் 2020 உடன் ஒப்பிடும்போது 2040க்குள் புற்றுநோய் பாதிப்புகள் இரட்டிப்பாகும். அவற்றில் பலவற்றை தனிப்பட்ட, சமூக மற்றும் அரசு மட்டங்களில் தடுக்க முடியும். ஆனால் எதையும் செய்யாவிட்டால், ஒரு சமூகமாக நாம் பெரும் விலையை செலுத்த வேண்டியிருக்கும்" என தெரிவித்துள்ளார்.