"நீங்க செத்துப் போயிட்டீங்க.. ஓட்டு போட முடியாது" தேர்தல் அதிகாரி வார்த்தையால் பதறிய முதியவர்…!
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட புதுக்கிராமம் அங்கன்வாடி மையத்தில் அமைந்திருக்கு வாக்குச்சக்காவடிக்கு வாக்களிக்க வந்த ஒரு வயதானவரை நீங்க செத்துப் போயிட்டீங்க ஓட்டு போட முடியாது என தேர்தல் அதிகாரி கூறியதால் அதிர்ச்சியில் உறைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிந்தாமணி நகர் பகுதியை சேர்ந்தவர் மருதப்பன்(70). இவர் தனியார் திருமண மண்டபத்தில் வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று புதுக்கிராமத்தில் உள்ள 192வது வாக்குசாவடி மையத்தில் அரசு கொடுத்த பூத் சிலிப்பினை கொண்டு தனது வாக்கினை செலுத்த சென்ற போது அங்கிருந்த தேர்தல் அதிகாரி நீங்கள் செத்துப் போய்விட்டதாக வாக்காளர் பட்டியலில் உள்ளது. எனவே நீங்கள் வாக்களிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் மருதப்பன் அரசுதான் தனக்கு வாக்களிக்க பூத் சிலிப் வழங்கி உள்ளது. எப்படி நான் செத்துப் போயிட்டேன் ஓட்டு போட முடியாது என்று கூற முடியும் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
இதையடுத்து தேர்தல் அதிகாரி கோவில்பட்டி தாசில்தார் சரவணபெருமாளை தொடர்பு கொண்டு பிரச்சனையை எடுத்து கூறினார். முதியவரை தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கலாமென்று என்று தாசிலல்தார் கூறியதை தொடர்ந்து ஒரு விண்ணப்பத்தில் முதியவர் மருதப்பனிடம் அவரது கைரேகை மற்றும் கையெழுத்து பெற்ற பின்னர் அவரை வாக்களிக்க அதிகாரிகள் அனுமதித்தனர்.
தனக்கு வயது 70 ஆகிறது ஒவ்வொரு தேர்தலிலும் என்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறேன். உயிரோடு இருக்கும்போது என்னை இறந்ததாக கூறி பட்டியலில் இருந்து நீக்கியது எப்படி ?, அப்படி என்றால் அரசு ஓட்டு போட எனக்கு பூத்சிலிப் கொடுத்தது எப்படி? தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருதப்பன் கோரிக்கை வைத்துள்ளார்