உலக மக்கள் தொகை 800 கோடியை கடந்தது..!! சென்னைக்கு எந்த இடம்..?
உலக மக்கள் தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”உலக மக்கள் தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியைக் கடந்துவிட்டது. கடந்தாண்டு நவம்பா் மாதமே, உலக மக்கள் தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஐ.நா. சபை மதிப்பிட்டிருந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவுகிறது.
கடந்த 2000ஆம் ஆண்டு 600 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை, தற்போது 800 கோடியாக உயர்ந்துள்ளது. மக்களின் சராசரி வயது 32ஆக அதிகரித்துள்ளது. வரும் 2060ஆம் ஆண்டு அது 39-ஆக உயரும். கனடா போன்ற நாடுகளில் முதியோா்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. கடந்த 1960-2000 வரையிலான காலகட்டத்தில் உலக மக்கள் தொகை வளா்ச்சி விகிதம் 2 மடங்காக இருந்த நிலையில், தற்போது அது குறைந்துள்ளது.
பெண்கள் கருவுறும் விகிதம் தொடா்ச்சியாக குறைந்து வருவது கடந்த 50 ஆண்டுகளாக உலக மக்கள் தொகை குறைவான விகிதத்தில் அதிகரித்து வருவதற்கான காரணம் ஆகும். அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் அடிப்படையில், டோக்கியோவின் மக்கள் தொகை 3,71,94,105 ஆக உள்ளது. டெல்லி 3,29,41,309 மக்கள் தொகையுடன் 2ஆம் இடத்திலும், சீனாவின் ஷாங்காய் 2,92,10,808 மக்களுடன் 3ஆம் இடத்திலும் உள்ளன.
அதேபோல் 2,12,96,517 மக்களுடன் மும்பை 9-வது இடத்திலும், 1,53,32,793 மக்களுடன் கொல்கத்தா 17வது இடத்திலும், 1,36,07,800 மக்களுடன் பெங்களூரு 23வது இடத்திலும், 1,17,76,147 மக்களுடன் சென்னை 26வது இடத்திலும் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.