"நீங்க சீட்டு தந்தா மட்டும் போதும்.." சிவகங்கை தொகுதி பற்றி கார்த்தி சிதம்பரம் பேட்டி.!
வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த முறை சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார். இந்த முறை சிவகங்கை தொகுதியில் திமுக வேட்பாளர் தான் போட்டியிட வேண்டும் என அப்பகுதி திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர் .
மேலும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில் இது தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு பதில் அளித்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கட்சி மேலிடம் எங்கு வாய்ப்பு கொடுத்தாலும் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் " சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக களம் இறங்க காங்கிரஸ் மற்றும் திமுகவைச் சார்ந்த நிர்வாகிகள் முயற்சி செய்து வருகின்றனர். இது ஜனநாயக முறைப்படி ஒரு ஆரோக்கியமான போட்டியே. காங்கிரஸ் போன்ற உயிர்ப்புடன் இருக்கும் அரசியல் கட்சிகளில் இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என தெரிவித்தார்.
மேலும் இந்த தேர்தலில் போட்டியிடுவது பற்றி கட்சி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். தான் பொறுப்பு வகித்த இந்த 5 ஆண்டுகளில் தனது பொறுப்புக்களை திறன் பட செய்ததாகவும் தெரிவித்தார். என்னுடைய ஆட்சி காலத்தில் சிவகங்கை தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததையும் சுட்டிக்காட்டினார். சிவகங்கை தொகுதி என்று இல்லை எந்த தொகுதியில் கட்சி விரும்புகிறதோ அங்கு நான் போட்டியிட தயார் என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் கார்த்தி சிதம்பரம்.