முருகனுக்கு காவடி எடுப்பதன் காரணம் என்ன?... தைப்பூச திருநாளும் அதன் சிறப்புகளும்!
தை மாதம் என்பது தெய்வீக மாதமாகும். இந்த தை மாதத்தில்தான் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும். அன்றைய தினமே தைப்பூசமாக கொண்டப்படுகிறது. தைப்பூசம் தினத்தில் தான் இந்த அகிலம் தோன்றியதாக ஒரு ஐதீகம் உள்ளது. இந்த நன்னாளானது முருகனுக்கு உகந்த நாளாகும். அதோடு சிவனுக்கும், குரு பகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும். பல சிறப்புக்கள் மிக்க தைப்பூச நாள் அன்று விரதம் இருந்தால் கேட்ட வரத்தை தந்தருள்வார் முருகன் என்பது நம்பிக்கை.
தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி? நாள் முழுவதும் பூச நட்சத்திரம் இருப்பதால் காலை முதல் மாலை வரை முருகனை நினைந்து உபவாசம் இருந்து முருகனை தரிசித்து, வழிபாடு செய்வது நல்லது. இதில் காலை மதியம் என இருவேளையும் பால், பழம் மட்டுமே அருந்தி விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று வழிபடுவது சிறந்தது. முருகனை வழிபடும் சமயத்தில் முருக வேலையும் சேர்த்து வழிபடுவது நல்லது. முடிந்தால் காலை மாலை என இருவேளையும் முருகன் கோயிலிற்கு சென்று வழிபடுவது மேலும் சிறப்பை சேர்க்கும்.
முருக பக்தர்கள் பலர் தைப்பூச விரதத்தை 48 நாட்கள் இருப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் தொடங்கி தைப்பூசம் வரை விரதம் இருப்பது வழக்கம். அன்னை பார்வதி தேவி, முருகனுக்கு ஞானவேல் வழங்கியது இந்த நன்னாளில் தான். அதனால்தான் அன்று வேலையும் வணங்குவது நல்லது என்று ஆச்சாரியார்கள் கூறுகின்றனர். அந்த ஞானவேல் கொண்டே ஞானபண்டிதன் அசுரவதம் புரிந்தார் என்பது வரலாறு.
தை பிறந்தால் வழிபிறக்கும் என்று வாழ்க்கையை நம்பிக்கையுடன் சூரிய பகவானுக்குப் பொங்கலிட்டு வழிபட்டு எதிர்நோக்கும் நாம் தைப்புச நன்னாளிலே நம்மை வாட்டிவதைக்கும் துன்ப, துயரங்கள் யாவும் துடைத்தெறியப்பட வேண்டும் என்று நம்மை ஆட்டிவிக்கும் மாபெரும் சக்தியான சிவசக்தியை மனதிருத்தி பிரார்த்தனை செய்வதுடன் வாழ்விலே நலங்கள் சூழ, வாழ்வு சிறக்க வாழவழி கிட்ட வேண்டும் என்று விரதமிருந்து வேண்டுதல் செய்து தொழுகின்றோம்.
இத்தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவது சிறப்பாகும் இயலாதவர்கள் புண்ணிய நதிகளை நினைத்துப் போற்றி வழிபட்டு நீராடுதல் வேண்டும். வாழ்வில் ஒளியேற்றும் இத் தைப்பூச நன்னாள் பல்வேறு நற்செயல்கள் தொடங்கும் நாளாக அமைகின்றது. “தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்” என்பது பழமொழியாக அமைவதால்; ஏடு தொடக்கம், புதிர் எடுத்தல், புதி துண்ணல், பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல், திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற் கொள்ளப்பெறுகின்றன.
முருகனுக்கு காவடி எடுப்பதன் காரணம் என்ன? அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து, தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார். அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விரு கிரிகளையும் திருவாவினன்குடியில் (பள்நீ) நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.
இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார். இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.
ஆனால் அந்த சிறுவன் இந்த மலை ”தனக்கே சொந்தம்” என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான். இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக முருகன் வரமளித்தார். இந் நிகழ்வு முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது என்று ஆன்மீக வாதிகள் கூறுகின்றார்கள்.