காவல்துறை அதிகாரிகளுக்கு வந்த உத்தரவு... வேக கட்டுப்பாடு மீறினால் உடனே அபராதம் விதிக்க வேண்டும்...!
சென்னையில் வேக கட்டுப்பாட்டை மீறும் வாகனங்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்க போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாட்டை நிர்ணயிக்க, காவல்துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, பாதுகாப்பு, வேகமாக பயணிப்பது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை போக்குவரத்து ஆணையருக்கு அனுப்பியது. குழுவின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டு வேக கட்டுப்பாடு நடைமுறை நவம்பர் 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
நகர போக்குவரத்து காவல்துறையின் அறிவிப்பு படி,, இலகுரக மோட்டார் வாகனங்கள் வேக வரம்பு மணிக்கு 60 கிமீ மற்றும் கனரக மோட்டார் வாகனங்கள் மணிக்கு 50 கிமீ வேகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, இரு சக்கர வாகனங்களில் வேக வரம்பு மணிக்கு 50 கிமீ ஆகவும், ஆட்டோ ரிக்ஷாக்கள் மணிக்கு 40 கிமீ ஆகவும் உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் செல்லும் பொழுது, அனைத்து வகையான வாகனங்களுக்கும் 30 கி.மீ., வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேக வரம்புகளையும் மீறினால் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.
மாநகரம் முழுவதும் 177 சந்திப்புகளில் ‘ANPR’ எனப்படும் ஆட்டோமேடிக் நம்பர் பிளேட் பதிவு கேமராக்களை பொருத்தும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது என்றும் ஒரே நாளில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
மேலும் ரேடார் கண் மூலமாக வேகம் கண்டறியப்பட்டு வேகத்தை மீறிய நான்கு கார்கள், 111 இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இரண்டு நாட்களில் ரூ.12,100 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேக கட்டுப்பாட்டை மீறினால் உடனடியாக அபராதம் விதிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.