தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் மிக கனமழை..! வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இது அடுத்த 2 நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனிடையே தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் காரணமாக கடந்த ஒரு வாரமாக டெல்டா, தென் மற்றும் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 25ஆம் தேதி மயிலாடுதுறை, நாகை,தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் நவம்பர் 27ஆம் தேதி விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கணித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
மேலும் நவம்பர் 28ஆம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.