சங்கராச்சாரியார்கள் 'பிரான் பிரதிஷ்டைக்கு' ஏன் செல்லவில்லை தெரியுமா.? வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்.!
பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பதால், அவர் பங்கேற்ற அயோத்தியில் நடந்த பிரான் பிரதிஷ்டை விழாவிற்கு சங்கராச்சாரியார்கள் செல்லவில்லை என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார் உதயநிதி ஸ்டாலின்.
ஞாயிற்றுக்கிழமை கிழக்கு சென்னை திமுக மாவட்ட பிரிவு ஏற்பாடு செய்த கட்சி முகவர்கள் கூட்டத்தில் பேசிய, தமிழக விளையாட்டு வளர்ச்சி மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் நடந்த பிரான் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்றதால், சங்கராச்சாரியார்கள் அதில் பங்கேற்கவில்லை என்று கூறினார்.
சனாதன தர்மத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை பற்றி தான் 4 மாதங்களுக்கு முன்பு பேசியதாகவும், அதற்கு பார்ப்பனர்களின் இந்த செயலே சாட்சி என்றும் கூறினார். சனாதன தர்மம் கொரோனா வைரஸ், டெங்கு, மலேரியா போன்றது. சமத்துவம் மற்றும் சமூக நீதி உருவாக வேண்டும் என்றால் அதனை ஒழிக்க வேண்டும் என்று, தான் முன்பு கூறியதை நினைவுக்கூர்ந்தார். மேலும் தான் கூறிய அந்தக் கருத்திற்கு மன்னிப்பு கேட்க போவதில்லை என்றும் தெரிவித்தார்.
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கணவனை இழந்தவர் என்பதாலும், பழங்குடியின சமூகத்தைச் சார்ந்தவர் என்பதாலும், பாஜக அவரை பிரான் பிரதிஷ்டை விழாவிற்கு அழைக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். அயோத்தியில் ராமர் கோவில் எழுப்பியதற்கோ அல்லது எந்த ஒரு மதத்திற்கும் திமுக எதிரானது அல்ல என்பதை வலியுறுத்தினார்.
தமிழக இந்து அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2023 செப்டம்பரில் முற்போக்கு எழுத்தாளர் மன்றத்தில் உரையாற்றிய போது உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை பற்றி கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. ஆயினும் நீதிமன்றங்களின் மீது தனக்கு மரியாதை இருப்பதாகவும், தகுந்த நீதியை எதிர்பார்ப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.