இன்று உலக எய்ட்ஸ் தினம்!. எச்.ஐ.வி.தொற்றில்லா நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்!.
World AIDS Day: டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1988 ஆம் ஆண்டு முதல்முறையாக இந்த தினம் எய்ட்ஸ் தினமாக அறிவிக்கபப்ட்டது. எய்ட்ஸ் நோய் என்பது தீவிரமான உயிர்கொல்லி நோயாகும். இந்த நோய் எவ்வாறு பரவுகிறது, பாதுகாப்பாக இருப்பது எப்படி மற்றும் நோய் ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வு உலகம் முழுக்க சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நாள் உலக எய்ட்ஸ் தினமாக அறிவிக்கப்பட்டது.
எச்ஐவி வைரசால் ஏற்படும் இந்த நோய் பற்றி இப்போது வரை பல விதமான கட்டுக்கதைகள் கூறப்பட்டு வருகின்றன. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம். HIV என்று பரவலாகக் கூறப்படும் ஹ்யூமன் இம்யூனோ டிஃபிஷியன்ஸி வைரஸ் என்று கூறப்படும் வைரஸால் உருவாகும் நோய் தான் எய்ட்ஸ். எச்ஐவி வைரஸ் தோற்றால் எய்ட்ஸ் (AIDS – Acquired Immuno Deficiency Syndrome) நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி முழுவதுமாக உருக்குலைந்து விடும். சில ஆண்டுகளுக்கு முன் வரை எய்ட்ஸ் நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தது.
1981 ஆம் ஆண்டு முதல்முறையாக கண்டறியப்பட்ட எச்ஐவி வைரஸ் தொற்றால், உலகம் முழுக்க இதுவரை கிட்டத்தட்ட 3.6 கோடி மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சளி, காய்ச்சல், அல்லது பாக்டீரியா, வைரஸ் பூஞ்சைத் தொற்று, என்று எதுவாக இருந்தாலுமே, உடல் அதனை நேரடியாக எதிர்த்து போராடும். ஆனால் இந்த வைரஸ் தொற்று ஏற்படும்பொழுது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகிவிடும். இம்யூனிட்டி செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து போய், வைரஸ் பாதித்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் போய்விடும்.
சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுவது தான் எய்ட்ஸ் நோயாளிகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று. பல ஆண்டுகளாக, உலக சுகாதார மையம், அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள் என்று பல அமைப்புகள் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இருப்பினும், எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் எய்ட்ஸ் நோய் எவ்வாறு பரவுகிறது என்பதை பற்றி பல விதமான தவறான கருத்துக்களை மக்கள் இன்றுவரை நம்பி வருகிறார்கள். இதுவே எய்ட்ஸ் நோய் மேலும் பரவுவதற்கும், எய்ட்ஸ் நோயாளிகளை குற்றவாளிகளாக பார்ப்பதற்கும், ஒதுக்கி வைப்பதற்கும் முக்கிய காரணமாக இருக்கின்றன.
எச்ஐவி என்பது வைரஸ், எய்ட்ஸ் என்பது நோய். எச்ஐவி பாதித்தவர்களுக்கு எய்ட்ஸ் நோய் ஏற்படும் ஆபத்து மிக அதிகம். ஆனால், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அனைவருக்குமே எய்ட்ஸ் நோய் ஏற்படும் என்பது தவறான கருத்து. தொற்றின் தீவிரம் குறைக்க மருந்துகள், சிகிச்சை எடுத்துக்கொண்டால் எய்ட்ஸ் நோய் ஏற்படாமல் தடுக்க முடியும்.
எய்ட்ஸ் நோயாளிகளுடன் பழகினால், அவர்களுடன் சாப்பிட்டால், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தினால் எய்ட்ஸ் பரவும். எய்ட்ஸ் என்பது காற்றில் பரவும் தொற்று நோய் கிடையாது. எய்ட்ஸ் நோயாளிகளுடன் பழகுவது, அவர்களுடைய பொருட்களை பயன்படுத்துவது, அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, வெளியில் செல்வது இவற்றால் எய்ட்ஸ் பரவாது. வியர்வை, சளி, எச்சில் வழியாக எய்ட்ஸ் பரவாது.
எய்ட்ஸ் நோய் உருவாவதற்கு முக்கிய காரணமான எச்ஐவி வைரஸ் என்பது உடலில் இருக்கும் திரவங்கள் வழியாகத்தான் பரவும். எச்ஐவி தொற்று, பாலியல் உறவுகள் மேற்கொள்ளும் போது, வைரஸ் தொற்று பாதித்தவர்களின் ரத்தம் இன்னொரு நபருக்கு ஏற்றும் போது, கர்ப்பிணிக்கு எச்ஐவி பாதிப்பு இருந்தால் அது குழந்தைக்கு ஏற்படலாம் என்று இதன் வழியாகத்தான் எச்ஐவி தொற்று ஏற்படும். எனவே எச்ஐவி பாதித்த நபர்களுடன் அல்லது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகினாலே, நமக்கும் எய்ட்ஸ் வந்துவிடும் என்பது மிக மிக தவறான கருத்து.
கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்தால், கருவில் இருக்கும் குழந்தையும் எச்ஐவி பாதிப்புவோடு பிறக்கக் கூடியதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால் எச்ஐவி பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எல்லாமே, எச்ஐவி தொற்றுடன் பிறப்பது இல்லை. வைரஸ் தொற்று நெகட்டிவாக, தொற்று பாதிப்பு இல்லாமல் ஆரோக்கியமான குழந்தைகளாக பிறக்கிறார்கள். அதாவது அம்மாவுக்கு எச்ஐவி தொற்று இருந்தால் அது நிச்சயமாக குழந்தைக்கும் எச்ஐவி தொற்று இருக்கும் என்பது தவறான கருத்து.
Readmore: ஷாக்!. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!.