"கடந்த 10 வருடங்களில் இந்தியாவின் நிலைமை இதுதான்" சமூக வலைதளத்தில் பதிவிட்ட ராஷ்மிகா மந்தனா.. ரியாக்ஷன் கொடுத்த மோடி!
கடந்த பத்து ஆண்டு கால பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சியை புகழ்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா பதிவிட்டுள்ளார். நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள ‘அடல் சேது’ பாலம் குறித்து இதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2016 முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. கன்னட சினிமாவில் என்ட்ரி கொடுத்து தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த பத்து ஆண்டு கால பாஜக ஆட்சியில், இந்தியா கண்டுள்ள வளர்ச்சியை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் ஷிவ்டி-யிலிருந்து நவாவை இணைக்கும் 22 கி.மீ. நீளமுள்ள 6 வழிச்சாலையுடன் கூடிய பிரம்மாண்ட கடல் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மாதம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இப்பாலம் 'அடல் பிஹாரி வாஜ்பாய் சேவரி - நவா சேவா அடல் சேது' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, 'அடல் சேது' கடல் பாலம் வழியாக பயணம் செய்த தனது அனுபவத்தை எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும் அந்தப் பதிவில், “தென்னிந்தியா முதல் வட இந்தியா வரை... மேற்கு இந்தியா முதல் கிழக்கு இந்தியா வரை... மக்களை இணைக்கிறது... இதயங்களை இணைக்கிறது...” எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், 'அடல் சேது' கடல் பாலம் குறித்த ராஷ்மிகா மந்தனாவின் பதிவை மேற்கோள் செய்துள்ள பிரதமர் மோடி, “நிச்சயமாக, மக்களை இணைப்பதையும், வாழ்க்கையை மேம்படுத்துவதையும் விட திருப்திகரமாக எதுவும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடல் சேது திட்டம் குறித்து ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ராஷ்மிகா மந்தனா, “மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ளது ‘அடல் சேது’ பாலம். இதன் மூலம் இரண்டு மணி நேர பயணம் இருபது நிமிட பயணமாக மாறியுள்ளது. இது சாத்தியம் என நாம் யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா?
இளம் தலைமுறையை கொண்டுள்ள இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா ஸ்மார்ட்டான நாடு. இளம் பாரதியர்கள் வாக்களிக்க வேண்டும். இப்போது அவர்களுக்கு அந்த பொறுப்பு உள்ளது. அவர்கள் சரியான திசையில் பயணிக்கிறார்கள் என மக்கள் நம்புகிறார்கள். இந்த வளர்ச்சி இதோடு நிற்கக்கூடாது. வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்” என ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
சிலிண்டர் வாங்கும்போது இதை கவனிக்க மறந்துறாதீங்க..!! இது மிக மிக அவசியம்..!!