’காங்கிரஸ் கட்சிக்கு இதுதான் கடைசி தேர்தல்’..!! எச்சரிக்கும் மத்திய அமைச்சர்..!!
ராகுல் காந்தி வழியில் சென்றால், இது காங்கிரஸ் கட்சியின் கடைசி தேர்தலாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விமர்சித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளித்த பேட்டியில், ”ஆர்.எஸ்.எஸ்-யின் கை பொம்மையாக பிரதமர் நடந்து கொள்கிறார். மோடி மீண்டும் பிரதமராக வந்தால், இதுவே நாட்டின் கடைசி தேர்தலாக இருக்கும். தேர்தலில் மோடி வெற்றி பெற்றால், நாட்டில் சர்வாதிகாரம் ஏற்படும். புடின் ரஷ்யாவை ஆள்வது போல பாஜக நாட்டை ஆளும்” என்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “சிறந்த அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. அவருக்கு எதிராக எவ்வித அவமதிப்பு கருத்தும் நான் கூறவில்லை. ராகுல் காந்தி வழியில் சென்றால், இது காங்கிரஸ் கட்சியின் கடைசி தேர்தலாக இருக்கும். இந்தத் தேர்தல் காங்கிரசின் கடைசித் தேர்தலாக இருக்கக் காரணம், கார்கேவிற்கு அளித்த தலைவர் பதவியா? பாஜகவையும் ஆர்எஸ்எஸ்ஸையும் விஷம் என்கிறார்கள். மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். ஆனால், இந்த நாட்டு மக்கள் அமைதி, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை விரும்புகிறார்கள். இந்த புதிய இந்தியாவில் காங்கிரசுக்கு எந்தப் பங்கும் இல்லை” என்றார்.