துயரத்தின் உச்சம்!… சேவையில்லாமல் போன மிகப்பெரிய மருத்துவமனை!... 3 குழந்தைகள் பலி!
இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலால் கடும் பாதிப்படைந்த காஸா நகரின் மிகப்பெரிய மருத்துவமனையில் சேவையில்லாமல் போனதால் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த அக். 7-ம் தேதி காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போரினால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில், 4000க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பலியாகி உள்ளனர்.
கடல், வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது தரை வழியாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், காஸாவின் மருத்துவமனைகள், மசூதிகள், முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. காஸாவின் அல்-ஷிபா மருத்துவமனை அமைந்துள்ள பகுதியிலும், மருத்துவமனை வளாகத்திலும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நோயாளிகளும் மற்றும் மருத்துவ குழுவினர் தவிர்த்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. தொடர்ந்து தாக்குதல்களையும் இஸ்ரேல் நடத்திவருகிறது.
இந்த தாக்குதலால் ஆங்காங்கே மருத்துவமனைகள் கடும் சேதமடைந்து வருகின்றன. அந்தவகையில், வடக்கு காசாவில் அமைந்துள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் சேவை இல்லாமல் போனதால் நேற்று பிறந்த 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று சிஎன்என் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், புதிதாக பிறந்த குழந்தைகளில் 36 குழந்தைகளுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் 400 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், சுமார் 20,000 இடம்பெயர்ந்த மக்கள் மருத்துவமனை வளாகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், மருத்துவமனை "நான்கு திசைகளிலிருந்தும் சூழப்பட்டுள்ளது" என்றும் சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் மருத்துவர் முனிர் அல்- பர்ஷ் கூறினார்.
காசாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மருத்துவர் அஷ்ரப் அல்-கித்ரா, அவர் அல்-ஷிஃபா வளாகத்திற்குள் சிக்கியதாகக் கூறினார். மருத்துவர். கித்ரா CNN க்கு அளித்த பேட்டியில், இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் பலமுறை குறிவைக்கப்பட்ட பிறகு, வளாகம் தற்போது "சேவையில் இல்லை" என்று கூறினார். தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு மற்றும் ஆக்ஸிஜன் சாதனங்கள் வேலை செய்வதை நிறுத்திவிட்டன என்றும் இவர் கூறினார்.
மேலும், ஹமாஸ் காசா மருத்துவமனைகள் மற்றும் பிற சிவிலியன் உள்கட்டமைப்பை தனது இராணுவ நடவடிக்கைகளுக்கு மறைப்பாக பயன்படுத்துகிறது என்று IDF தொடர்ந்து கூறியுள்ளது. வடக்கு காசாவில் உள்ள பொதுமக்களை தெற்கே செல்லுமாறு எச்சரித்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரை முடிந்தவரை இழுத்தடிக்குமாறு ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா அழைப்பு விடுத்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.