அரசின் சுமையை நீதிமன்றத்தின் மீது சுமத்தக்கூடாது!… காற்று மாசு விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது!… உச்ச நீதிமன்றம்!
காற்று மாசை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் டெல்லி அரசு செயல்படாமல் இருந்துவிட்டு, சுமையை நீதிமன்றத்தின்மீது சுமத்தக்கூடாது என்றும், இந்த விவகாரத்தில் எங்களால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது' எனவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் கடுமையாக குறைந்தது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகள் அதிக அளவில் எரியூட்டப்படுவதை அடுத்து, டெல்லியின் காற்று தரக்குறியீடு கடுமையாக உயர்ந்தது. இது, பொதுமக்கள் இடையே மூச்சு திணறல் ஏற்படும் அளவுக்கு மோசமானது. இதைத் தொடர்ந்து பல கட்டுப்பாடுகளை விதித்த டெல்லி அரசு, கார்களின் பதிவு எண் அடிப்படையில் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க எண்கள் உடைய கார்களை சுழற்சி முறையில் இயக்கும் திட்டத்தை நவ., 13 முதல் அமல்படுத்த முடிவு செய்தது.
இந்நிலையில், டெல்லியின் காற்று மாசை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லி அரசு தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுழற்சி முறையில் கார்களை இயக்குவது காற்று மாசை கட்டுப்படுத்த உதவாது என, நீதிமன்றத்துக்கு உதவும் அமிகஸ் க்யூரி கடந்த 7ம் தேதி விசாரணையின் போது தெரிவித்தார். ஆனால், வாடகை கார்களுக்கும் அதை போவதாக டெல்லி அரசு இன்று கூறுகிறது. காற்றின் தரம் சீர்கெடுவதை தடுக்க அரசு செயல்படாமல் இருந்துவிட்டு, அந்த சுமையை நீதிமன்றத்தின் மீது சுமத்தக்கூடாது. நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்காது என்று நீதிபதிகள் கூறினர்.
இதற்கிடையே, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்து வருவதை அடுத்து காற்றின் தரம் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 460 ஆக இருந்த காற்று தரக்குறியீடு நேற்று மதியம் நிலவரப்படி 314 ஆக ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது.