13 அடி வரை கடல் அலை சீற்றம்... காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புயல் எப்பொழுது கரையை கடக்கும்...?
ஃபெங்கல் புயலானது, காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்க உள்ள நிலையில், மாமல்லபுரத்தில் இருந்து சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ள கல்பாக்கத்தில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது, 13 அடி வரை கடல் அலை எழுந்து கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவின் பரிந்துரைப்படி இதற்கு ‘ஃபெங்கல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்துவட தமிழக கடற்கரை பகுதியில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே இன்று பிற்பகல் புயலாக கரையை கடக்கக்கூடும். அப்போது, மணிக்கு 70-80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
இதன் காரணமாக, தமிழகத்தில் டிசம்பர் 5-ம் தேதி வரை மழை நீடிக்கும். இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் (‘ரெட் அலர்ட்’) பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.