கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...!
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் காலை 10 மணிக்குள்ளாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோவில், தரங்கம்பாடி, பூம்புகார், சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.